Thursday, January 22, 2009

செய்தி: ஆர்ப்பாட்டம்

சென்னை, 22 ஜனவரி:

இந்தியாவில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்களையும், பூச்சிமருந்துகளையும் அறிமுகம் செய்த வேளாண் அறிவியல் விஞ்ஞானிகளே ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் விவசாயிகளின் வாழ்வைப்பறித்து, அவற்றை தயாரித்த நிறுவனங்களை வாழவைப்பதாக ஒப்புக் கொள்கின்றனர்.


இந்நிலையில் அதே வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள், மரபணு மாற்ற உணவுப்பொருட்களை இந்தியாவில் திணிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


பயிர்களை அதிகமாக தாக்கக்கூடிய பூச்சிகளை கொல்லும் விஷப்பொருட்களை அந்த தாவரங்களின் மரபணுவில் பொருத்துவதையே மரபணு மாற்றம் என்று அழைக்கின்றனர். இதன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை தனியே பயன்படுத்த தேவையில்லை என்றும், ஏனெனில் அந்தப்பயிர் முழுவதுமே விஷத்தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால் அந்த விஷப்பொருட்கள், அந்த தானியங்களை உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏராளமான ஆபத்துகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதை இந்த விஞ்ஞானிகள் சாமர்த்தியமாக மறைத்துள்ளனர்.

இத்தகைய ஆபத்தான மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரிசி, கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு, உளுந்து, துவரம்பருப்பு, கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பப்பாளி போன்ற 41க்கும் மேலான உணவுப்பொருட்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.


இத்தகைய ஆபத்தான பயிர்களை உருவாக்குவதில் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மான்சான்டோ என்ற பன்னாட்டு பகாசுர நிறுவனத்தின் கைக்கூலி நிறுவனமாகவே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மாறிவிட்டது.


தமிழர்களின் பாரம்பரிய அறிவுச்சொத்தான பல இயற்கை தானியங்களை வளர்த்தெடுக்காமல், அவற்றை அழித்தொழிக்கும் நோக்கதோடு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்பவர்களுக்கு அரிப்பு முதல் ஆண்மைக்குறைவுவரை பிரச்சனைகள் ஏற்படும் என்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் மனிதர்களின் பாதுகாப்பு குறித்த எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்று வெளிப்படையாகக் கூறும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மனிதர்களுக்கு கேடுவிளைவிக்கும் மரபணு மாற்று பயிர்களை உருவாக்கும் ஆய்வை அயராது மேற்கொண்டு வருகிறது.


குறிப்பாக தற்போது மான்சான்டோவின் முதல் உணவுப்பயிரான மக்காச்சோளத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அதன் நிலத்தில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரான வகையில் களப்பரிசோதனை செய்துவருகிறது.


தமிழர்களுக்கு விருப்பமான கத்தரிக்காயில் மரபணு மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மான் சான்டோ நிறுவனத்தின் இந்திய கூட்டாளியான மஹிகோ, சந்தையில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் Bt கத்தரிக்காய் மனிதர்களுக்கு மிகவும் ஏற்றது என்று கூறி வருகிறது. ஆனால் பிரான்ஸ் நாட்டின் மரபணு மாற்று அறநெறிக்குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய மூத்த விஞ்ஞானியான செரெலினி என்பவர் மஹிகோ நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகள் அனைத்தும் தவறானவை என்று நிரூபித்துள்ளார்.

நாகாலாந்து, மிசோரம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும், நமக்கு அண்டை மாநிலமான கேரளாவிலும் மரபணு மாற்று பயிர்களுக்கும், உணவுப்பொருட்களுக்கும் மற்றும் ஆய்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால் தமிழ்நாட்டில் அரசு சார்பு நிறுவனமான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமே மரபணு மாற்று ஆய்வுகளை முதன்மைப்பணியாக மேற்கொண்டு செயல்படுகிறது. இந்த மக்கள் விரோத நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

No comments: