http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/05/24001635/IT-Staff-who-organized-the-eventAncestors-paddy-cultivation.vpf
சென்னையில் பாரம்பரிய விதை கண்காட்சி
ஐ.டி. பணியாளர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி:
முன்னோர்கள் சாகுபடி செய்த நெல், விதைகள் என்ன?
சென்னையில் பாரம்பரிய விதை திருவிழா
கருத்துகள்
ஞாயிறு, மே 24,2015, 12:16 AM IST
முன்னோர்கள் சாகுபடி செய்த நெல், விதைகள் என்ன? என்பது பற்றிய பாரம்பரிய விதை திருவிழா சென்னையில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) பணியாளர்களின் ஏற்பாட்டில் நடந்தது.
பாரம்பரிய விதை திருவிழா
சென்னை, தியாகராயநகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா பள்ளியில், முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரிய விதை திருவிழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி அமைக் கப்பட்டிருந்த 20 அரங்குகளில் 40 வகையான காய், கனிகளின் விதைகள், 20 சிறுதானியங்களின் விதைகள், 20 வகை நெல் விதைகள், 35 வகை சோளம் விதைகள், கம்பு, திணை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு மற்றும் நோய்களை குணப்படுத்தும் நூற்றுக்கணக்கான மூலிகைச் செடி விதைகள், கீரை விதைகள் வைக்கப்பட்டிருந்தன.
மாதிரி காய்கறி விதை
பார்வையாளர்களுக்கு விதைகளின் ரகங்கள் மற்றும் செடிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. வீட்டு மாடிகளில் உள்ள தோட்டங்களில் பயிரிடுவதற்காக ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட மாதிரி காய்கறி விதை பாக்கெட்டுகளையும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
இளைஞர்களை கவரும் வகையில், இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட பருத்தி செடியிலிருந்து எடுக்கப்பட்ட நூலில், இயற்கை சாயம் கலந்து தயாரிக்கப்பட்ட சட்டை, குர்தா போன்ற ஆடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
சம்பா அரிசி தோசை
மரபணு மாற்ற விதைகளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. திணை மாவில் தயாரிக்கப்பட்ட பால் கொழுக்கட்டை, பாரம்பரிய வரகு சாம்பார் சாதம், கரிவேப்பிலை துவையல், சிறுதானிய லட்டு, உளுந்து வெந்தய களி, மாப்பிள்ளை சம்பா அரிசி தோசை, ஆர்கானிக் தோசை, முடக்கத்தான் சூப், தூதுவளை சூப், பருத்தி பால் பாயாசம், மூலிகை தேனீர் போன்றவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை பார்வையாளர்கள் விரும்பி வாங்கிச் சாப்பிட்டனர்.
தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் நடத்திவரும் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு மற்றும் இயற்கை விவசாய சந்தை அமைப்பு ஆகியவை சார்பில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை ரோகிணி, நடிகர் கிஷோர், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் அனந்து, கோபி, ரேகா, ராதிகா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment